மக்கள் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்குவதை எளிதாக்கவே, மெக்கானிக்கல் மற்றும் அனலாக் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மயமாக்கல் என்பது வளர்ச்சித் திட்டமா ? வீழ்ச்சி திட்டமா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!
“குடி குடியை கெடுக்கும்” “மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு” என வாசகங்களை மது பாட்டில்களில் அச்சடித்துவிட்டு, மதுபானங்களை விதவிதமாக தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. மேலும் ELITE டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் மதுபிரியர்கள் பண பரிவர்த்தனைக்கு மாற்றாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறை படுத்தியுள்ளது. சென்னையில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பணத்திற்கு பதிலாக UPI மூலம் பணம் செலுத்தி பில்லையும் பெற்று கொள்ளலாம்.
தமிழ்நாடெங்கும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் டிஜிட்டல் திட்டத்தை டாஸ்மாக்கிலும் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இதன்மூலம் மது பிரியர்கள் எளிமையாக பணம் செலுத்தி மது பாட்டில்களை பெற்றுக் கொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை ஓட்டமாக சென்னை மற்றும் கோவையில் டாஸ்மாக் கடைகளை டிஜிட்டலாக மாற்றும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும், இன்னும் 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தொழிற்சாலைகளுக்கு மது பாட்டில்கள் ஆர்டர் கொடுப்பது முதல், டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபிரியர்கள் கைககளில் மதுபாட்டில்கள் சேரும் வரை அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆகிறதாம். மேலும் மது பாட்டில்கள் செல்லும் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்த இடத்துலேயே கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
என்னதான் டிஜிட்டல் மயமானாலும் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் பணத்தை கடைக்காரர்கள் வாங்காமல் விட மாட்டார்கள் என்கிறார்கள் மதுபிரியர்கள்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழ்நாட்டில் புதியதாக டிஜிட்டல் டாஸ்மாக் கடைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும். முறைகேடுகள் குறையும். எளிதாக கண்காணிக்க முடியும் என்கிறார் டாஸ்மாக் பணியாளர்.
டாஸ்மாக்கில் டிஜிட்டல் மயம் , தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அங்கமாக இருந்தாலும் இளைய சமுதாயத்தினர் மற்றும் தினமும் குடிக்க ஆர்வமில்லாதோரைக் கூட எளிமையில் அடிமையாக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் மதுப்பிரியர்களின் நிலைமையோ கேள்விக்குறிதான்.