அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளன
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதை ஒட்டி, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வாகினர்.
இந்நிலையில், முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி பாஜக 46 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், பிற கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.