நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 241 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதேபோல், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 35, திரிணாமுல் காங்கிரஸ் 29, திமுக 21, தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 14 இடங்களில் முன்னணியில் உள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 294 தொகுதிகளில் முன்னணியில் உள்ளனர். பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அந்த இலக்கை கடந்து அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
எனவே பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இண்டி கூட்டணி 233 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 17 தொகுதிகளில் முன்னணியில் உள்ளன.