பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
18-வது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அப்போது, 17-வது மக்களவையை கலைக்க பரிந்துரை செய்யப்படும். இந்தப் பரிந்துரையை நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பப்படும். இதனை ஏற்று அவர் 17-வது மக்களவையை கலைப்பார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களின் பட்டியல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும்.
பின்னர் அவர், 18-வது மக்களவையை அமைக்கும் பணியைத் தொடங்குவார். விதிகளின்படி, குடியரசுத்தலைவர் தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார்.
இதன்படி, பெரும்பான்மைக்கு அதிகமான 272 இடங்களை விட தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.