2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்று மாநில தலைவர் அண்ணாமலை உறுதியுடன் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 20 சதவீதம் இலக்கை வைத்து கடுமையாக உழைத்தும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம் என்றார்.
அதேசமயம் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பாஜக-விற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்பதாக கூறிய அவர், இந்த தேர்தலில் தமிழகத்தின் பல இடங்களில் பாஜகவுக்கு வாக்கு வங்கி உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். பாஜக பெற்ற வாக்குகள் பணம் கொடுக்காமல் பெற்றவை என்றும், வருங்காலங்களில் தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு பாஜக சார்பில் எம்பிக்களை அனுப்புவோம் எனவும் அண்ணாமலை உறுதியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் நேர்மையுடன் தேர்தலை சந்தித்து பல இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.