பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகளாவிய நன்மைக்காக இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உத்திபூர்வ கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரதமர் வாழ்த்து.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லியன் பிரதமர் நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்றாவது பதவிக்காலத்திற்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்திய ஜனநாயகத்தையும், உலகின் மிகப்பெரிய தேர்தல்களை நடத்திய விதத்தையும் அவர் மிகவும் பாராட்டினார்.
வான் டெர் லியனின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் வலுவான இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த ஆண்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ராஜதந்திர கூட்டாண்மையின் 20-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், உலகளாவிய நன்மைக்கான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றும் தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இன்று தொடங்கவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.