சென்னை அம்பத்தூரில் நவீன தகனமேடை அமைக்கும் பணியை பார்வையிட்ட கட்டுமான நிறுவனத்தின் சூப்பர்வைசர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேர் சாலையில் ஒன்றரை கோடி மதிப்பீட்டில், புதிய நவீன தகன மேடை அமைக்கும் பணி சார்பில் நடைபெற்று வருகிறது.
தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்த பணியில், செங்கல்பட்டை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர், நவீன தகன மேடை பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, அவர் மீது எதிர்பாராதவிதமாக உயர் மின்னழுத்த கம்பி உரசியுள்ளது. இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீரபத்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.