குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்தாண்டு திறப்பதற்கு வாய்ப்பு குறைவு என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பயிர்களை பாதுகாக்கும் அளவிற்கு கூட மழை பெய்யவில்லை என்றும், பயிர் பாதிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்றும், மேட்டூர் அணையின் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பை பொறுத்து அணை திறக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.