ஜம்மு-காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சிவகோடி குகைக் கோயிலுக்கு பக்தர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
மலைப்பகுதியான ரியாசி பகுதி அருகே சென்றபோது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 உயிரிழந்த நிலையில், 33 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற பாதுகாப்பு படையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 10 பேரில் இன்னும் யாரும் அடையாளம் காணப்படவில்லை என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரியாசி வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளார்களா என்பதை கண்டறிய பாதுகாப்புப் படையினர் ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் தடய அறிவியல் குழுவினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், ரியாசி பகுதி ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மனித குலத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் தேசம் துணை நிற்கிறது எனக்கூறியுள்ள அவர், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.