கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் 1 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் தடையாக இருக்கக்கூடாது எனக்கருதி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பெறப்படும் கல்விக்கடனை 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக முதலமைச்சர் ஸ்டாலின் உயர்த்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விக்கடன் பெறும் மாணவர்கள், படித்து முடித்து 6 மாதங்களுக்கு பின் வரும் 5 ஆண்டுகளுக்குள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் கல்விக் கடனுக்கான வட்டி அதிக பட்சமாக 10 சதவிகிதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்டவற்றை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, மாணவர்கள் இந்த கல்விக்கடனை பெற்று தங்களின் கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.