ஜி 7 மாநாட்டில் பங்கேற்ற பிறகு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
இத்தாலியின் அபுலியா பகுதியில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
இதனைத்தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். உக்ரைன் அதிபருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் அமைதியை கொண்டு வரலாம் என இந்தியா நம்புவதாகவும் மோடி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இத்தாலியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, மோடி காலை 10 மணியளவில் டெல்லி திரும்பினார். ஜி-7 மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்காக, சர்வதேச தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.