தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 11ஆம் தேதி தொடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான நேஷனல் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் தமிழகம் சார்பில் மயிலாடுதுறையைச் சேர்ந்த 4 மாணவிகள் கலந்து கொண்டனர்.
இறுதிப்போட்டியில் மகேஷ், வைதேகி ஆகிய மாணவிகள் தங்கம் வென்று அசத்தினர். கார்த்திகா, ஹீமா ஆகிய மாணவிகள் வெள்ளிப்பதக்கங்களை வென்ற நிலையில், ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு அரசு கைகொடுத்து நிதி உதவி அளித்தால் தேசிய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் பல பதக்கங்களை குவிப்போம் என வெற்றி பெற்ற மாணவிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.