மேகதாது அணை தொடர்பாக மத்திய அமைச்சர் சோமண்ணா பேச்சுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேகதாது அணை சிக்கல் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களின் அரசுகள் பேச்சு நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வி.சோமண்ணா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்று நீர் சிக்கலில் தமிழ்நாட்டின் உரிமைகளையும், தண்ணீரையும் பறிக்கும் நோக்கத்துடன் கர்நாடக அரசால் செயல்படுத்தப்படும் திட்டம் தான் மேகதாது அணை திட்டம் எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும் இதுகுறித்து தமிழக அரசு எவ்வாறு பேச்சு நடத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அவர் அவ்வாறு பேச்சு நடத்த ஒப்புக்கொண்டால்
தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்ப்பதாக அது அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேகதாது அணையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள அவர் மத்திய நீர்வளத்துறை அமைச்சரான சோமண்ணா, இனியாவது கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.