ஜூன் மாதத்திற்கான நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கோரி கர்நாடக அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்றும், ஆனால், தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரை உரிய நேரத்தில் அளிக்க மறுப்பதை கர்நாடக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கான உரிய நீரினை பெற்றுத்தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு விவசாய பெருமக்களிடையே ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள ஒ.பன்னீர்செல்வம், காங்கிரசுடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் முதலமைச்சர், கர்நாடக முதலமைச்சருடன் பேசி தேவையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.