இத்தாலியில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் இந்தியா சாதித்தது என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!
ஜி-20 மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பை
கடந்த 2023ம் ஆண்டு, இந்தியா ஏற்றிருந்தது. அப்போது ‘ ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், உலகில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக நடத்தப்படும் அனைத்து உச்சி மாநாடுகளிலும் இந்தியா பங்கேற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அந்த ஆண்டு, ஜப்பானில் நடந்த, 49வது ஜி-7 உச்சிமாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
ஜி 7 நாடுகளுக்கு இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கும் சுழலில், இந்தியா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
இந்திய பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் ஜி 7 நாடுகளான பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடாவை விட பன்மடங்கு வளர்ந்து வருகிறது. .
‘இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது என்றும் , நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் இன்னும் வளரும் என்றும் சர்வதேச நாணய நிதி ஆணையம், தெரிவித்திருக்கிறது.
மேலும், உலகில் ஏழு பெரிய வளர்ந்த நாடுகளை முந்தும் அளவுக்கு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று உலக வங்கியின் ஆய்வறிக்கையும் தெரிவிக்கிறது.
ஸ்திர தன்மை கொண்ட ஒரு வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குவதால், இப்போது உலக நாடுகளின் பார்வை இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது என்று சர்வ தேச பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இன்றைய சூழலில், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மையப்பகுதியாக இந்திய-பசிபிக் மண்டலம் விளங்குகிறது.
இந்திய- பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து ஐரோப்பிய யூனியன் தனக்கு சாதகமான முடிவுகளை எடுத்துவருகிறது.
மற்றொரு புறம் ,பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், இந்திய- பசிபிக் மண்டலத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு, வேறு வகையான யுக்திகளைக் கையாண்டு வருகிறது. மேலும் இந்திய- பசிபிக் மண்டலத்தில் ஜெர்மனியும் தன் நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறது.
எனவே, ஜி 7 நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய-பசிபிக் மண்டலத்தை குறி வைக்கிறது.
இந்நிலையில் இந்திய-பசிபிக் மண்டலத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சீனாவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவால் ஏற்படும் சவால்களைச் சமாளிப்பதற்கு, ஒரு நம்பகமான தோழமையாக இந்தியாவை மேற்குல நாடுகள் ஏற்றுக்கொண்டு விட்டன என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளில் இருந்து தப்பிக்க, இந்தியா தான் ரஷ்யாவுக்கு துணை நிற்கிறது.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட ரஷ்யா தனது எண்ணெயை தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு வழங்கியது. தள்ளுபடி விலையில் எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பதன் விளைவாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு அதிக எண்ணெய் சப்ளை செய்யும் நாடாக ரஷ்யா மாறியுள்ளது .
ரஷ்ய எண்ணெய் மீதான தடை, எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை அதிக அளவில் நம்புவதற்கு வழிவகுத்தது.
ஐரோப்பாவிற்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்வதில் உலக அளவில் இந்தியா முதலிடம் இருக்கிறது. இதனால், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வெளிவர இந்தியா கை கொடுக்கிறது என்றே சொல்லவேண்டும்.
உலகப் பொருளாதாரம் சமநிலை பெற இந்தியாவின் பங்களிப்பே மிக முக்கியமானதாக இருக்கிறது.
இந்த பின்னணியில், இத்தாலியில் நடைபெற்ற 50வது ஜி 7 உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்காவின் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய முக்கியமான இருதரப்பு சந்திப்புகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றும், அனைவருக்கும் மலிவு விலையில் எரிசக்தி கிடைக்க செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இம்மாநாட்டில், இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா வழித்தடத்தை மேம்படுத்துவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இது இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும். இந்தியாவின் மேற்கு கரையில் இருந்து அனுப்பப்படும் பொருட்கள் கப்பல் வழியாக எமிரேட்ஸுக்கு சென்று அங்கிருந்து ரயில் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும். இந்நிலையில்தான் தற்போது ஜி7 நாடுகள் கூட்டத்தில் எமிரேட்ஸில் ரயில் தடத்தை மேம்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது அமையும் என்பதால் ஜி 7 நாடுகள் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
சர்வதேச உறவுகளில் இந்தியாவின் அணுகுமுறைகளைத் தெளிவுபடுத்தி காட்டுவதற்கும் G-7 உச்சி மாநாட்டை இந்தியாவுக்கான தளமாக பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார் என்றும் புவிசார் அரசியல் வல்லுநர்கள் பாராட்டுகிறார்கள்.
உலகம் சிக்கலான சவால்களை எதிர்கொள்ளும்போதெல்லாம், அவற்றை சமாளிப்பதற்கும் , சரியான தீர்வு காண்பதற்கும் இந்தியாவின் ஆலோசனையும் பங்களிப்பும் மிக அவசியமானது என்பதை இப்போது உலக வளர்ந்த நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன.
இந்நிலையில் , ஜி 7 விரைவில் ஜி 8 என அழைக்கப்படவேண்டும். அதற்கு ஜி 7 அமைப்பில் இந்தியாவுக்கு இடமளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.