அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி செய்ததாக எழுந்த புகாரில் நிகில் குப்தா செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
காலிஸ்தான்களுக்கு தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இவரை பயங்கரவாதி என மத்திய அரசு அறிவித்துள்ளது. நியூயார்க் நகரில் வைத்து குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க கொலை சதியில் ஈடுபட்டதாக கூறி நிகில் குப்தாவை செக் குடியரசு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
செக் குடியரசின் பராக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிகில் குப்தாவை அமெரிக்க போலீசார் தனி விமானத்தில் அழைத்து சென்றனர். செக் குடியரசு போலீசார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.