பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து முதல்முறையாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்ற மோடி, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக 20,000 கோடி ரூபாயை விடுவித்துள்ளார்.
இதன் மூலம் 9 கோடியே 26 லட்சம் விவசாயிகள் பயன்பெறவுள்ளனர். மேலும், ‘வேளாண் தோழிகள்’ திட்டத்தின்கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30,000 பெண்களுக்கு சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வாரணாசி மக்கள் எம்.பி.யை மட்டுமல்லால், பிரதமரையே தேர்ந்தெடுத்ததாக குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தலில் 31 கோடி பெண்கள் வாக்களித்ததை நினைவுகூர்ந்த பிரதமர், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவிலான பெண்கள் வாக்களித்ததாகவும், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட அமெரிக்க மக்கள்தொகைக்கு சமம் என்றும் தெரிவித்தார்.
ஜனநாயக நாட்டில் தொடர்ந்து மூன்று முறை ஒரே கட்சி ஆட்சிக்கு வருவது அரிது என்றும், தேர்தல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக அரசு ஹாட்-ட்ரிக் சாதனை படைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.