தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரேஷன் அட்டைதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் போதிய அளவில் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விளக்கம் விளிம்புநிலை மக்களுக்கு பலன் தருமா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….!
நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் வாழ்வாதரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதற்காக தொடங்கப்பட்டது தான் நியாய விலைக் கடைகள். பொது விநியோக முறையின் கீழ் 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 2.06 கோடி குடும்ப அட்டைத்தாரர்கள் நியாய விலைக் கடைகள் மூலம் பயன்பெறுகின்றனர். பயனாளிகளுக்கு மாதந்தோறும் அரிசி இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பும், பாமாயிலும் இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன. இந்த இரு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்திகளும் வெளியாகின.
மே மாதம் பொருளே சிலருக்கு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டும் நிலையில் ஜூன் மாதமும் துவரம் பருப்பு, பாமாயிலை அரசு விநியோகம் செய்யாதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் சில ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு இருந்தால் பாமாயில் இல்லை, பாமாயில் இருந்தால் துவரம் பருப்பு இல்லை என்ற நிலை இருப்பதாக பயனாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை தமிழக அரசு தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து கிடங்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளிம்புநிலை மக்களுக்காக தொடங்கப்பட்ட ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைக்கவும், குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிக்காமல் உணவு பொருட்களை உடனுக்குடன் வழங்கவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.