ஐஎன்எஸ் சுனைனா போர்க்கப்பல் மொரீஷியசில் உள்ள போர்ட் லூயி துறைமுகத்துக்குச் சென்றுள்ளது.
ஐஎன்எஸ் சுனைனா போர்க்கப்பல் மொரீஷியசின் போர்ட் லூயிக்கு 2024 ஜூன் 20 அன்று சென்றது. இந்தக் கப்பல் 2024 ஜூன் 24 வரை அங்கு இருக்கும்.
இந்தக் கப்பல் மொரீஷியஸ் கடலோர காவல்படை கப்பலான பாராகுடா உள்ளிட்டவற்றுடன் இணைந்து கடல்சார் கண்காணிப்பில் ஈடுபடும்.
இந்தப் பிராந்தியத்தில் கூட்டு சிறப்பு ரோந்துப் பணி, கடல்சார் பாதுகாப்பில் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியக் கடற்படையின் உறுதிப்பாட்டை இந்தப் பயணம் எடுத்துரைக்கிறது.
ஐஎன்எஸ் சுனைனா கப்பல் அங்கு சென்றதும், மொரீஷியஸ் படையின் இசைக்குழு சார்பில் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
போர்ட் லூயி துறைமுகம் சென்றுள்ள இந்தக் கப்பல், தொழில்முறை மற்றும் சமூகப் பணிகள், மொரீஷியஸ் துறைமுக பணியாளர்களுக்கான பயிற்சி, மருத்துவ முகாம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு போர்ட் லூயியில் ஐஎன்எஸ் சுனைனா, மொரீஷியசின் பாராகுடா கப்பல் ஆகியவற்றில் கூட்டு யோகா அமர்வு நடத்தப்பட்டது.
இதில் இந்தியக் கடற்படை மற்றும் மொரீஷியஸின் தேசியக் கடலோரக் காவல்படை வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கப்பல் பார்வையாளர்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் சுனைனாவின் மொரீஷியஸ் பயணம், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.