வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களின் நலன் கருதி, இ-விசா நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை பிரதமர் மோடி வரவேற்றார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை, கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தியா-பசிபிக் தொலைநோக்குத் திட்டம் ஆகியவற்றில் வங்கதேசம் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.
இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை இந்திய ரூபாயில் தொடங்கியது, கங்கையில் படகு சவாரி ஏற்படுத்தியது, குடிநீர் குழாய் வசதி என கடந்த ஓராண்டில் இந்தியா-வங்கதேசம் இடையே ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் முதன்முறையாக இந்தியாவுக்குதான் வந்ததாக கூறினார். மேலும், வங்கதேசத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.