“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில், நியாயத்திற்காக போராடும் பாஜகவினரை கைது செய்யாமல் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகனை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்.முருகன். இவர் 2- வது முறையாக மத்திய தகவல் ஒலிப்பரப்பு மற்றும் நாடாளுமன்றங்கள் விவாகரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டநிலையில் தனது சொந்த மாவட்டமான நாமக்கல்லுக்கு வருகை தந்தார். அப்போது, நாமக்கல் மாவட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்தும், பொன்னாடை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை வரவேற்றனர்.
இதனையடுத்து நாமக்கல் கோட்டை ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் எல்.முருகன் தரிசனம் செய்தார். இதனைத் தெடார்ந்து பேசிய அவர், “தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும்” எனவும், “இச்சம்பவத்திற்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்றும் தெரிவித்தார்.