நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில், தேசிய தேர்வு முகமையை மேம்படுத்துவதற்கு 7 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
நீட் தேர்வில் நேரத்தை இழந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான நெட் தேர்வு வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், வெளிப்படையான மற்றும் சுமுகமான தேர்வு முறையை உறுதிப்படுத்த உயர்நிலைக் கமிட்டியை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அந்த கமிட்டியில், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரண்தீப் குலேரியா, சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பி.ஜெ. ராவ் உள்ளிட்ட ஏழு பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த கமிட்டி விரிவான ஆய்வு மேற்கொண்டு தேசிய தேர்வு முகமையை மேம்படுத்துவதற்கான பரிந்துரையை 2 மாதங்களில் தாக்கல் செய்யும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.