தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் உரத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை அடையும் இலக்குடன் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த இயக்கத்தின் கீழ், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சைட் எனப்படும் பசுமை ஹைட்ரஜன்- மாற்றத்துக்கான உத்திசார் தலையீடுகள் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்களை 16.01.2024 அன்று வெளியிட்டது.
இந்த இயக்கத்தின் அமலாக்கம் பலரின் கவனத்தை ஈர்ப்பதால், பசுமை ஹைட்ரஜனின் தேவை அதிகரித்து வருகிறது.
உரத் துறைக்குப் பசுமை அம்மோனியாவின் தேவை அதிகரித்து வருவதால், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், 16.01.2024 நாளிட்ட திட்ட வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்து, உரத் துறைக்கான அம்மோனியா ஒதுக்கீட்டை ஆண்டுக்கு 2 லட்சம் டன் அளவுக்கு உயர்த்த முடிவு செய்துள்ளது.
அதாவது, தற்போதுள்ள, ஆண்டுக்கு 5,50,000 டன் பசுமை அம்மோனியா ஒதுக்கீடு 7,50,000 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் 04 ஜனவரி 2023 அன்று தொடங்கப்பட்டது. 2029-30 நிதியாண்டு வரை இதனை செயல்படுத்த ரூ.19,744 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தூய்மையான எரிசக்தி மூலம் தற்சார்பு நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கிற்கு இது பங்களிப்பதுடன், உலகளாவிய தூய்மை எரிசக்தி மாற்றத்திற்கும் உத்வேகம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.