எக்ஸ் தளத்தில் லைவ் ஸ்ட்ரீம் வசதியை பெற விரும்புவோர் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் தளத்தை 3.30 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினார். ட்விட்டரைக் கைப் பற்றியதில் இருந்தே, அதில் பல புதிய மாற்றங்களைச் செய்து வருகிறார். முதலில் தளத்தின் பெயரை எக்ஸ் என மாற்றியதோடு, ட்விட்டரின் சின்னமான நீலப் பறவையிலிருந்து “எக்ஸ்” லோகோவை புதியதாக மாற்றி அமைத்தார்.
இந்நிலையில், புதிதாக எக்ஸ் தளத்தில் இணையும் பயனாளர்களுக்கு, அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிப்பை, கடந்த வருடம் அறிவித்திருந்தார். அதன் படி, எக்ஸ் தளத்தில் இணையும் புதிய பயனாளர்கள் ஆண்டு கட்டணம் செலுத்தவேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். எக்ஸ் தளத்தில் இருக்கும் போலி கணக்குகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சியை எடுப்பதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
எலான் மஸ்க் அறிவிப்பின் படி, இனி புதிதாக, எக்ஸ் தளத்தில் இணையும் பயனாளிகள், தங்கள் கருத்துக்களைப் பதிவிடவும், மற்றவர்களுடன் உரையாடவும் , குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கப் படும் என்று தெரியவருகிறது.
இந்த கட்டணமுறை ,ஏற்கெனவே, கடந்த அக்டோபரில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள புதிய பயனாளிகளுக்கு, Not a Bot” program, “நாட் எ பாட்” திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அந்த நாடுகளில் ஆண்டுக்கு ஒரு அமெரிக்க டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, எலான் மஸ்க் புதிய அறிவிப்பாக, லைவ் ஸ்ட்ரீமைத் தொடங்க பயனர்கள் பிரீமியம் சந்தாவை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. எக்ஸ் தள அனைத்து பயனாளர்களுக்கும் தனிப்பட்ட பிளாட்ஃபார்மில் விருப்பங்களை ஏற்படுத்திய சிறிது நேரத்திலேயே இந்த புதிய அப்டேட் எக்ஸ் தளத்தில் வந்துள்ளது.
லைவ் ஸ்ட்ரீம் பகுதியில் கட்டணம் செலுத்தும் பக்கத்தில், எப்போது பணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் இல்லை என்றாலும் இது “விரைவில்” நடைமுறைக்கு வரும் என்று தெரிய வருகிறது.
தன்னுடைய அதிகாரப்பூர்வ ‘@live’ பகுதியில் எக்ஸ் தளம் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், விரைவில் தொடங்கும் , பிரீமியம் சந்தாதாரர்கள் மட்டுமே X- ல் லைவ்ஸ்ட்ரீம் என்ற நேரடி வீடியோக்களை உருவாக்க முடியும் என்றும், தொடர்ந்து நேரலையில் வீடியோக்களை உருவாக்க பயனாளர்கள் தங்கள் கணக்குகளை எக்ஸ் பிரீமியத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில், பிரீமியம் சந்தா மாதம் 215 ரூபாயில் இருந்து இருக்கும் என்றும் , எக்ஸ் பிரீமியம் ப்ளஸ் சந்தா 1,133 ரூபாய் இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எக்ஸ் தளம் உட்பட எலான் மஸ்க் வைத்திருக்கும் நிறுவனங்களின் விளம்பர வருவாய் போதுமானதாக இல்லை என்பதால் , பிரீமியம் சந்தா மூலம் வருவாய் உருவாக்க, எலான் மஸ்க் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.