உலக அளவில் துறைமுக தர வரிசை பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இந்திய துறைமுகங்கள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
உலகவங்கியுடன் சேர்ந்து S&P Global Market Intelligence என்னும் நிறுவனம் ஆண்டுதோறும் Container Port Performance Index என்ற பெயரில் உலகிலுள்ள ஒவ்வொரு துறைமுகத்துக்கும் ‘கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டை தருகிறது.
துறைமுகங்களின் செயல்பாட்டுத் திறனில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கணக்கில் கொண்டு இந்த தர வரிசை தயாரிக்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு துறைமுகங்களிலும் கப்பல்கள் இருக்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த துறைமுகங்களின் செயல்திறன் கணக்கிடப்படுகிறது. பிறகு உலக அளவில் துறைமுக தரவரிசை வெளியிடப்படுகிறது.
2023ம் ஆண்டுக்கான கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டில் முதல் 100 உலகளாவிய துறைமுகங்களில் ஒன்பது இந்திய துறைமுகங்கள் இடம் பெற்றுள்ளன. உலகளாவிய தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் 9 இந்திய துறைமுகங்கள் இடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
2022 ஆம் ஆண்டு தரவரிசையில் 115-வது இடத்தில் இருந்த மத்திய அரசுக்கு சொந்தமான விசாகப்பட்டினம் துறைமுகம், இப்போது 19-வது இடத்துக்கு உயர்ந்து, முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளது.
2022ஆம் ஆண்டில் 48 வது இடத்தில் இருந்த அதானியின் முந்த்ரா துறைமுகமும் வளர்ச்சியடைந்து உலக துறைமுக தரவரிசையில் 27வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலக துறைமுகங்களின் தரவரிசையில், முதல் 100 இடங்களுக்குள், 41 வது இடத்தில் குஜராத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகமும், 47 வது இடத்தில் தமிழகத்தில் எண்ணுாரில் உள்ள காமராஜர் துறை முகமும், 63 வது இடத்தில் கேரளாவில் உள்ள கொச்சின் துறைமுகமும், 68 வது இடத்தில் குஜராத்தில் உள்ள சூரத் ஹசிரா துறைமுகமும், 71 வது இடத்தில் ஆந்திராவில் உள்ள நெல்லூர் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகமும், 80 வது இடத்தில் தமிழகத்தில் உள்ள சென்னை துறைமுகமும் மற்றும் 96 வது இடத்தில் மகாராஷ்ராவில் உள்ள மும்பை ஜேஎன்பிஏ துறைமுகமும் இடம் பிடித்துள்ளன.
சீனாவின் யாங்ஷான் துறைமுகமும், ஓமனின் சலாலா துறைமுகமும் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் முறையான கொள்கைகள் மற்றும் திட்டச் செயல் பாடுகளே இந்த சாதனைக்கு காரணம் என்று பொருளாதார வல்லுனர்கள் பாராட்டுகின்றனர்.