தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
ஏரல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பெங்களூரிலிருந்து தனது காரில் சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கார் முக்காணி கிராமத்திற்குள் நுழைந்த போது மணிகண்டன் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சாலையோரம் தண்ணீர்பிடித்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் 3-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்த பெண்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை கைதுசெய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.