மெக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொண்ட ஆயிரத்து 301 பயணிகள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக, ஆண்டுதோறும் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 14ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரைக்காக இதுவரை 20 லட்சம் பேர் சென்றுள்ளனர். சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வரும் சூழலில், யாத்திரை சென்றவர்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், கடும் வெப்பத்தால் உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை ஆயிரத்து 301ஆக அதிகரித்துள்ளதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் பதிவு செய்யப்படாத பயணிகள் என்றும், போதுமான தங்குமிடம் வசதியில்லாததால் நீண்ட தூரம் நடந்து சென்றதால் சோர்வு ஏற்பட்டு மரணமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்