போர் எதிரொலியாக, இஸ்ரேலில் 42,000 பெண்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாகவும், இதுவரை 18000 பெண்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப் பட்டுள்ளதாகவும், அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், இஸ்ரேல் நாட்டில் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை பெற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை 7 மாதங்களில் 88 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பென் க்விர் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலில் தனிப்பட்ட முறையில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லும் சட்டப் பூர்வ உரிமை இல்லை. மேலும், நாட்டில் கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்கள் இருந்தன.
எதற்காக துப்பாக்கியை வைத்துக்கொள்ளவும் எடுத்துச் செல்லவும் உரிமம் வேண்டும் என்பதற்கான சரியான காரணங்களையும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நலமாக இருப்பதற்கான மருத்துவச் சான்றிதழையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு கூடுதல் துப்பாக்கிக்கும் தனித்தனியாக அரசு அனுமதி பெறவேண்டும். இந்த உரிமங்களை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் புதுப்பிக்கவேண்டும்.
இந்த சூழலில் தான், கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி நடந்த ஹமாஸ் தீவிரவாத தாக்குதலுக்குப் பின் இஸ்ரேலிய பெண்கள் தங்களுக்கும், தங்களை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு கருதி துப்பாக்கி உரிமம் வாங்க விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.
இது ஹமாஸ் -இஸ்ரேல் போருக்கு முந்தைய நிலவரத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்று இஸ்ரேல் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆயுதங்களை வைத்திருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதும்,மக்களின் தற்காப்பு திறனை வளர்ப்பதும் அரசின் நோக்கம் என்று வெளிப்படையாக உறுதியளித்த பென் க்விர், இஸ்ரேலில் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற உடன் தனிநபர் ஆயுதச் சட்டங்களில் பல தளர்வுகளைக் கொண்டு வந்தார்.
அதன் பிறகுதான், இஸ்ரேலிய பெண்கள் துப்பாக்கி அனுமதிக்காக அதிகமாக விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மேற்கு கரை பகுதியில் 100,000 ஆயுதமேந்திய இஸ்ரேலிய பொதுமக்கள் இருப்பதாகவும் , ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான துப்பாக்கி அனுமதிகளை இஸ்ரேல் அரசு வழங்கி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிகமான தனிநபர் துப்பாக்கி அனுமதி வழங்குவதால், சமூகத்தில் வன்முறை மற்றும் கொலைகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், தனிமனித பாதுகாப்புக்கு இஸ்ரேல் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.