மக்களவை இடைக்கால தலைவர் நியமனத்தில் பிரச்சினை ஏதுமில்லை என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மக்களவை இடைக்கால தலைவராக பர்த்ருஹரி மகதாப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்தித்ததாகவும், தற்காலிக மக்களவைத் தலைவர் நியமனம் ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கதான் தற்காலிக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அவர் உதவுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.