இந்தியாவின் பிரபல தொழிலதிபராக இருந்த விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் திருமணம், லண்டனில் உள்ள அவரது எஸ்டேட்டில் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. சித்தார்த்த மல்லையா மற்றும் ஜாஸ்மின் திருமணக் கொண்டாட்டம் பற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .
இந்தியாவின் பிரபல தொழில் அதிபராகவும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமாக இருந்தவர் விஜய் மல்லையா. மதுபானத் தொழில், விமானச் சேவை தொழில், பத்திரிகைத் தொழில், உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த விஜய் மல்லையா இரண்டு முறை இந்திய மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
“King of Good Times “நல்ல காலத்தின் ராஜா” என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விஜய் மல்லையா தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை காரணமாக, எல்லோராலும் தம்மை ஆச்சரியமாக பார்க்க வைத்தவர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் 9000 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்த விஜய் மல்லையா,கடனைத் திரும்ப அடைக்காமல், நாட்டை விட்டே தப்பியோடினார்.
விஜய் மல்லையாவை பெரும் நிதி மோசடி செய்தவர் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்த இந்திய அரசு அவரை, பிரிட்டனில் இருந்து, இந்தியாவுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்த பலவழிகளில் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக, லண்டன் நீதிமன்றத்தில் , மத்திய அரசு வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
இந்தநிலையில், 37 வயதாகும் இவரது மகன் சித்தார்த் மல்லையாவுக்கும், அவரது நீண்ட நாள் காதலி ஜாஸ்மினுக்கும், லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் Hertfordshire ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள விஜய் மல்லையாவின் Lady walk estate என்ற ஆடம்பரமான எஸ்டேட்டில் நடைபெற்றுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இப்போது திருமணம் நடந்திருக்கிறது. சித்தார்த் மல்லையா மற்றும் ஜாஸ்மின் நிச்சயதார்த்தமும் வித்தியாசமான முறையில் நடந்தது. மந்திரவாதி போல உடை அணிந்திருக்கும் ஜாஸ்மின் காலடியில் மண்டியிட்டு சித்தார்த் மல்லையா தன் காதலைச் சொல்வதாக அமைத்திருந்தது. இந்த நிச்சய தார்த்த புகைப்படங்களைத் தங்கள் இன்ஸ்ட்டா பக்கத்தில் இருவரும் வெளியிட்டு இருந்தனர் .
சென்ற வாரம், திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளுடன் தொடங்கிய, திருமணக் கொண்டாட்டங்களில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். முதலில், கிறிஸ்தவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. கிறிஸ்தவ திருமணத்திற்கு ஒரு நாள் கழித்து, பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
கிறித்துவ முறைப்படியான திருமணத்தின் போது,சித்தார்த் பச்சை நிற வெல்வெட் ஆடை அணிந்திருக்க , அழகான வெள்ளை நிற கவுன் அணிந்திருந்த ஜாஸ்மின், இந்து திருமணத்திற்கு இளஞ்சிவப்பு நிற லெஹங்காவை அணிந்திருந்தது வந்திருந்த விருந்தினர்களால் வெகுவாக பாராட்டப் பட்டது.
திருமண விழாவின் ஒரு பகுதியாக மணமக்கள் நடனமாடும் காட்சிகளும், இருவரும் நான்கு அடுக்கு திருமண கேக் வெட்டும் காட்சிகளும் , தனது மகனுக்கு விஜய்மல்லையா முத்தமிடும் காட்சிகளும், இசைநிகழ்ச்சியில் விஜய் மல்லையா துள்ளிக் குதித்து நடனமாடும் காட்சிகளும், சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.
சித்தார்த் மல்லையா ஜாஸ்மின் திருமணக் கொண்டாட்டங்களில், கலந்த கொண்ட இன்னொரு பிரபலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் லலித் மோடி.
விஜய் மல்லையாவைப் போலவே, இந்தியாவில் 900 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி மோசடியில் குற்றம்சாட்டப் பட்டுள்ள லலித் மோடியும், லண்டனுக்குத் தப்பியோடிய நிலையில், விஜய் மல்லையா வீட்டு திருமணவிழாவில் கலந்து கொண்ட புகைப் படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடம்பர திருமண விழா ஒருபுறம் நடந்து முடித்திருக்க, இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு , லண்டனுக்குத் தப்பிய ஓடிய ஒருவரின் மகனுக்கு இந்த ஆடம்பரத் திருமணம் தேவையா ? என்ற கேள்வியும் விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.