தெற்கு ரஷ்யாவில் பெரும்பான்மையாக இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியான தாகெஸ்தான் பகுதியில் யூத தேவாலயங்கள் மற்றும் காவல்நிலையம் மீது நடத்தப் பட்ட தீவிரவாதிகள் தாக்குதலில், 6 காவல் துறையினர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
‘தாகெஸ்தான்’ ரஷ்ய கூட்டமைப்பின் 21 குடியரசுகளில் ஒன்றாகும். ரஷ்யாவின் வடக்கு காகசஸ் மண்டலத்தில் இருக்கும் ஐந்து முக்கிய மாகாணங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட தாகெஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
நீண்ட ஆண்டுகளாகவே ஜிகாத் என்னும் என்னும் பெயரில் வன்முறை கிளர்ச்சிகளைச் சந்தித்து வரும் (chechnya) செசன்னியாவின் எல்லையில் இருப்பதால், தாகெஸ்தான் பகுதி இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினரின் அதிகார மையமாக இருக்கிறது.
காகசியன் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆகிய இரண்டு அமைப்புக்களும் ரஷ்யாவில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப் பட்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளாகும். எனவே , இந்த இரண்டு தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் அடிக்கடி, ரஷ்ய அமலாக்கத் துறையினர், தீவிரவாத தடை சட்ட அமலாக்கப் பிரிவினர் ,பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக பல கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
தாகஸ்தானில், உள்ளூர் மரபுகளை உள்ளடக்கிய ஒரு இஸ்லாத்தை சூஃபிசம் என்னும் பெயரில் பெரும்பாலான மக்கள் பின்பற்றுகின்றனர். அதே தாகஸ்தானில், தீவிரவாத இஸ்லாத்தின் வடிவமான சலாபிசம் என்னும் கடுமையான இஸ்லாமிய மரபும் ஒரு சிலரால் பின்பற்றப்படுகிறது.
இந்த இரண்டு அமைப்புகளும் இடையே அடிக்கடி தீவிர தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில்தான், தாகஸ்தானில் உள்ள யூத தேவாலயம் உள்ளி்ட்ட மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப் பட்டுள்ளது. இதில் பாதிரியார் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்றும்,13 பேர் வரையில் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தேவாலயத்திற்குட்பட்ட தொழுகை கூடம் இருந்த வீடு தீப்பிடித்து எரிந்திருக்கும் நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரு குழுக்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, மாஸ்கோவில் உள்ள இசை அரங்கத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 135 க்கும் மேற்பட்டோர் பலியானபோது, ரஷ்யாவின் Federal Security Service என்னும் FSB, உள்நாட்டுப் பாதுகாப்புச் சேவை தாகெஸ்தானிலும் அதிரடியாக பல சோதனைகளை நடத்தி, தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
மீண்டும், இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கி இருப்பதைத் தடுப்பதற்கு முழு முயற்சியில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக ரஷ்ய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.