ஜூன் 25 ஆம் தேதி, இந்திய ஜனநாயகம் மீது தீராத கறை படிந்த நாள். சுயநலத்தின் காரணமாகவும் அதிகார வெறியின் காரணமாகவும் ஒரு குடும்பஅரசியலின் விளைவால் இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி எமெர்ஜென்சியைக் கொண்டு வந்து 49 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த கருப்பு தினத்தை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
49 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இதே தினத்தால் கொண்டுவரப்பட்ட அவசர நிலை பிரகடனத்தால், கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளால் இந்திய மக்கள் துயரத்திற்கு ஆளாகினர்.
அரசு அதிகாரியான யஷ் பால் கபூர் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு, இந்திரா காந்திக்காக தேர்தல் பணியாற்றினர் என்று சோசியலிஸ்ட் கட்சித் தலைவர் ராஜநாராயணன் தொடுத்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி, இந்திரா காந்தி மீதான இந்த தேர்தல் வழக்கில், அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகன் மோகன் சின்கா தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஜெயபிரகாஷ் நாராயண், வாஜ்பாய், எல்.கே.அத்வானி,மொரார்ஜி தேசாய், சரண் சிங், கிருபளானி உள்ளிட்ட தலைவர்கள், இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்று அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கோரிக்கை வைத்தார். நாடு முழுக்க, நீதிமன்றத் தீர்ப்பை மதித்து இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.
அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல், கட்டுக்கடங்காத அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, நாட்டில் அதிகரித்திருந்த வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர்களுக்கான நியாயமான ஊதியம் இன்மை, மக்களுக்கு எதிராக ஒரு ஆட்சியைத் தந்த இந்திரா காந்திக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே குஜராத் மற்றும் பீகார் சட்டமன்றம் கலைக்கப் பட்டிருந்த அசாதாரண சூழலில், பதவியை விட்டு விலக விருப்பமில்லாத இந்திரா காந்தி, நீதிமன்ற தீர்ப்புக்கும் தலைவணங்காமல் , பதவியில் நீடிக்க ஆலோசனையில் ஈடுபட்டார்.
உள்நாட்டு பிரச்சனைகளைச் சமாளிக்க , இந்திய அரசியல் அமைப்பின் 352 வது பிரிவின் கீழ் அவசர நிலை பிரகடனத்தை, அமைச்சரவை கூட்டத்தையும் கூட்டாமல், நாடாளுமன்றத்திலும் விவாதிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்தார் இந்திராகாந்தி.
இந்திராகாந்தி பரிந்துரை செய்த அவசர நிலை பிரகடனத்துக்கு, அன்றைய குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது, எந்த ஆலோசனையும் செய்யாமல் ஒப்புதல் அளித்தார்.
1975ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அதிகாலை, இந்திரா காந்தி தூங்க சென்ற போது, இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் கைது நடவடிக்கைகள் தொடங்கின. முதலில் ஜெய்பிரகாஷ் நாராயண், பிறகு மொராஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய் . எல்.கே அத்வானி என நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சிறையில் அடைத்து துன்புறுத்தப் பட்டனர். பெங்களூரு சிறையில், அடல் பிகாரி வாஜ்பாயும் , எல் கே அத்வானியும் அடைக்கப்பட்டனர்.
ஒரே நாளில் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். விசாரணையின்றி சிறை , சிறையில் சித்திரவதைகள் என மக்கள் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
அன்று காலை செய்தி தாள்கள் அச்சுக்கு ஏறும் நேரம் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கைது செய்யப் பட்ட தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டார் இந்திராகாந்தி .
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியிருந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டன. எந்த இந்தியருக்கும் ஜனநாயக சுதந்திரம் மறுக்கப் பட்டது. அனைத்து பத்திரிகைகளும் தணிக்கை செய்யப்பட்டன. நீதித்துறை முற்றிலுமாக இந்திரா காந்திக்கு ஆதரவாக செயல்பட்டன. தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
தொழிற்சங்கங்கள் மீதும் ஒடுக்குமுறை ஏவிவிடப் பட்டன. தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் , தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் தடைசெய்யபப்ட்டன. போனஸுக்கு வாய்ப்பில்லாத நிலையில் ஊதியங்களிலும் தடை ஏற்படுத்தியது. எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்பட்டது.
இந்த கொடுமைகள் போதாது என்று, மேலும் பல கொடுமைகளாக அவசர நிலை காலத்தில் 20 அம்சத் திட்டங்கள் இந்திரா காந்தியின் அறிவிக்கப் பட்டது.
இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியால் , சுமார் 34 லட்சம் பேருக்குக் கட்டாய குடும்ப கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்யப்பட்டன. விதவைகள், இளம்பெண்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மீதும் அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டன.
அவசர நிலை காலத்தில் 26 இயக்கங்கள் இந்திராகாந்தியால் தடை செய்யப்பட்டிருந்து . மேலும் ஆர்.எஸ்.எஸ், ஆனந்த மார்க் ஆகிய இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
எமர்ஜென்சியின் போது மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் போன்ற சொற்களைச் சேர்த்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தன் சொந்த ஆசாபாசங்களுக்கு ஏற்ப இந்திரா காந்தியின் காங்கிரஸ் மாற்றி அமைத்தது.
1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வரையிலான 21 மாதங்களுக்கு எமர்ஜென்சியின் கீழ் இந்தியா இருண்ட காலத்தில் இருந்தது.
இந்த கால கட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருந்த அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் முற்றிலுமாக நசுக்கப்பட்டன. ஆணவம் மற்றும் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளும் அதீத ஆசையில் இந்திராகாந்தி, இந்திய அரசியல் சாசனத்துக்கும், இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்த மிகப்பெரிய வன்முறையாக அவசர கால நிலை இருந்தது.
எனவே தான், 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜூன் 25ம் தேதி இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை படிந்து 50 ஆண்டுகள் ஆனதை குறிக்கிறது என்றும், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முற்றிலுமாக நிராகரிக்கப் பட்டு ,இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிக்கப் பட்டு மொத்த நாடே சிறைச்சாலையாக மாறியது என்றும் குறிப்பிட்டார். 50 ஆண்டுகளுக்கு முன் செய்த இது போன்ற செயலை மீண்டும் இந்தியாவில் செய்ய விடமாட்டோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலுடன் சாமானிய இந்திய மக்களின் கனவுகளை நிறைவேற்ற தீர்மானம் எடுப்போம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்திருக்கிறார்.