18-ஆவது மக்களவைத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் ஓம் பிர்லா மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மக்களவைத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினருடன் பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
அப்போது மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டுமென காங்கிரஸ் நிபந்தனை விதித்தது. இதற்கு பாஜக உடன்படவில்லை என்று தெரிகிறது.
இதன் காரணமாக காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தலைவர் பதவிக்கு கேரளாவை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சிக்கு 230-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதால், மக்களவைத் தலைவர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.