ஹரியானாவில் மாட்டுத்தொழுவத்தில் சிறுத்தை தாக்கியதில் 10 கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராமம் அருகே திக்லி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஊருக்குள் நடமாடும் 2 சிறுத்தை புலிகளை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த வனத்துறையினர், சிறுத்தை புலிகளை பிடிப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், திக்லி கிராமத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்திற்குள் புகுந்த 2 சிறுத்தை புலிகள் 10 கால்நடைகளை கொன்றுள்ளன.
இது குறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கிராம மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை புலிகளை பிடிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.