மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வாகியுள்ளார்.
18-ஆவது மக்களவைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இண்டியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர்.
நாடாளுமன்றத்தில் குரல் வாக்குப் பதிவு தொடங்கியதும், மக்களவைத் தலைவர் பதவிக்கு ஓம் பிர்லாவை நியமிப்பதற்கான தீர்மானத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் அந்தத் தீர்மானத்தை வழிமொழிந்தனர்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான்
மற்றும் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மஞ்சி ஆகியோர் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இண்டியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷை சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவை சேர்ந்த எம்.பி. அரவிந்த் சாவந்த், சமாஜ்வாடி எம்.பி. ஆனந்த் பதவ்ரியா, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் முன்மொழிந்தனர். திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி தீர்மானத்தை வழிமொழிந்தார்.
இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில், ஓம் பிர்லா மக்களவைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவை மரபுப்படி, அவரை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அழைத்து மக்களவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். கடந்த 25 ஆண்டுகளில் மக்களவைத் தலைவராக ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.