பெண்கள் சாராயம் குடிப்பதை கூட அறியாமல் கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது என தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயம் அருந்திய 61 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை 21 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் சார்பில் விசாரணை நடத்த அதன் உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் குஷ்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த காவலர்களிடம் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்.
மேலும், திரட்டப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸாரிடம் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பெண்கள் சாராயம் குடிப்பதை கூட அறியாமல் கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது ? என கேள்வி எழுப்பினார். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.