20 ஆண்டுகளில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற முதல் மக்களவை சபாநாயகர் என்ற பெருமை பெற்ற ஓம் பிர்லா, தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இதுவரை மக்களவை தலைவர் பதவியை அலங்கரித்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மட்டுமே மீண்டும் மக்களவை தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிலும், ஒருவர் மட்டுமே இரண்டு முறை மக்களவை சபாநாயகராக பதவி வகித்திருக்கிறார்.
18வது மக்களவையின் சபாநாயகராக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இதனால், பல்ராம் ஜாக்கருக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக மக்களவை தலைவராகும் பெருமையைப் பெற்றிருக்கிறார் ஓம் பிர்லா .
பிரதமர் மோடியின் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய வரலாற்றில் முதல் முறையாக , இரண்டாவது முறையாக தொடர்ந்து மக்களைவைத் தலைவராகும் சிறப்பை பெற்றிருக்கிறார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற மக்களைவைத் தலைவர் என்ற சாதனையையும் ஓம் பிர்லா படைத்திருக்கிறார்.
முன்னதாக, 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை 11வது மக்களவைத் தலைவராக இருந்த பி.ஏ. சங்மாதான் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி மக்களவை சபாநாயகராவார்.
அவரைத் தொடர்ந்து ,1999ம் ஆண்டில், மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எம்.சி.பாலயோகி 2002 ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
பாலயோகிக்குப் பின் மக்களவையின் சபாநாயகரான சிவசேனா உறுப்பினர் மனோகர் ஜோஷி, 2004ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெறாததால், மீண்டும் சபா நாயகராகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
எனவே, 2004ஆம் ஆண்டில், சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சோம்நாத் சட்டர்ஜி மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன் ,கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோம்நாத் சட்டர்ஜி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
2009 ஆம் ஆண்டு, காங்கிரஸ் சார்பில் மீரா குமார்,15வது மக்களவையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், 2014 மற்றும் 2019 தேர்தல்களில் மீரா குமார் தோல்வியடைந்தார்.
2014ம் ஆண்டு, இந்தூரில் இருந்து பாஜக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட சுமித்ரா மகாஜன் மக்களவை சபாநாயகரானார். எனினும், 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுமித்ரா மகாஜன் போட்டியிடவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா 17வது மக்களவையின் சபா நாயகரானார்.
இப்போது மீண்டும் அதே தொகுதியிலிருந்து வெற்றிபெற்று , நாடாளுமன்றத்துக்குள் சென்றிருக்கும் ஓம் பிர்லா, மீண்டும் இரண்டாவது முறையாக 18-வது மக்களவையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக சபாநாயகர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சபாநாயகராக தேர்வாகியுள்ளார் ஓம் பிர்லா.
1962ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, இந்து குடும்பத்தில் ஸ்ரீகிருஷ்ண பிர்லா மற்றும் சகுந்தலா தேவிக்கு பிறந்த ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவிலுள்ள அரசு வணிகவியல் கல்லூரியில் இளங்கலை பட்டமும் , அஜ்மீரில் உள்ள மகரிஷி தயானந்த சரஸ்வதி கல்லூரியில் வணிகவியல் பாடத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்ட ஓம் பிர்லா, இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.
1987ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் கோட்டா மாவட்டத் தலைவராக பணியாற்றிய ஓம் பிர்லா, அதே அமைப்பில் 1991ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை, மாநிலத் தலைவராக பதவி வகித்தார்.
தொண்ணூறுகளில் ராஜஸ்தானில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா வலிமையாக தடம் பதிக்க ஓம் பிர்லாவின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. தன்னலமற்ற தனது பணிகளால், 1997 ஆம் ஆண்டு,பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவரானார் ஓம் பிர்லா.
2003ம் ஆண்டு முதன் முதலாக , தெற்கு கோட்டா சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு , தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 10,101 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தொடர்ந்து, அடுத்து அடுத்து, நடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓம் பிர்லாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து கொண்டே இருந்தது.
13வது ராஜஸ்தான் சட்டப்பேரவையில், சபை விவாதத்தில், 500க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டதைத் தொடர்ந்து, 6 முறை ஓம் பிர்லாவுக்கு “சதன் கே சிதாரே” என்று சிறப்பு பட்டம் தரப்பட்டது.
IIT என்றால் கோட்டா என்றும் சொல்லும் அளவுக்கு, அந்நகருக்குப் பெருமை தேடி தந்த பெருமை ஓம் பிர்லாவையே சேரும்.
ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேவின் பாஜக அரசுக்குச் சிக்கல் ஏற்பட்ட போது, அதை சீரமைக்க, அமித்ஷாவால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓம் பிர்லா, ராஜஸ்தானில் பாஜகவின் வளர்ச்சிக்குப் பெரும் துணைபுரிந்தார்.
இதனாலேயே, அவர் 2014ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, கோட்டா தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
ஒரு சபாநாயகராக இருந்தவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் அதையும் சாதித்து காட்டி, மக்கள் செல்வாக்குள்ள சபா நாயகராக இருக்கிறார் என்பது தான் ஓம் பிர்லாவின் சாதனை.