பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களவையின் எதிர்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. 18 வது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராகியுள்ள ராகுல் காந்தியின் பணிகள் என்ன? பொறுப்புகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
543 உறுப்பினர்கள் உள்ள மக்களவையில், 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு அரசியல் கட்சி, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும்.
2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் எந்த எதிர்க்கட்சியும் 10 சதவீத இடங்களைப் பெறாததால், கடந்த 10 ஆண்டுகளாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருந்தது.
2014 மற்றும் 2019ம் ஆண்டு நடந்த பொது தேர்தல்களில் 10 சதவீதக்கும் குறைவான தொகுதிகளிலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. அதனால், மக்களவையில் எதிர்க்கட்சியாக கூட காங்கிரசுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்தமுறை எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.
இதனையடுத்து, கடந்த 8 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், ராகுல் காந்தியை எதிர்கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மேலும், ஜூன் 25 ஆம் தேதி நடந்த இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும், ராகுல் காந்தியை எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்தனர்.
5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி, 18வது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராகி இருக்கிறார்.
மக்களவையின் தலைவராக பிரதமர் செயல்படுவார் என்றாலும், எதிர்க்கட்சித் தலைவருக்கென்று சில குறிப்பிடத் தக்க பணிகளும் பொறுப்புக்களும் உள்ளன. சட்டப் படி,எதிர்கட்சித் தலைவருக்கு ஒரு கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் பாதுகாப்பும் கொடுக்கப்படுகிறது.
மத்திய அரசின் சக்திவாய்ந்த பொது கணக்குக் குழு, மட்டுமில்லாமல், பொது நிறுவனங்கள் மற்றும் மதிப்பீடுகள் போன்ற முக்கியமான குழுக்களின் உறுப்பினராக நியமிக்கப்படும் எதிர்கட்சித் தலைவர், நாடாளுமன்றக் கூட்டுக் குழுக்களிலும் உறுப்பினராக இருப்பார்.
அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை, மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, மத்திய தகவல் ஆணையம் மற்றும் மத்திய தேர்தல் ஆணையம் போன்ற சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பான பல தேர்வுக் குழுக்களிலும் எதிர்கட்சி தலைவர் உறுப்பினராக இருந்து அரசுக்கு துணையாக செயல்படுவார்.
நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து சிறப்பு விவாதம் நடத்த மக்களவையில் வைக்கப் படும் எதிர்கட்சித் தலைவரின் கோரிக்கைக்குப் பதிலளிக்க வேண்டிய கடமை, பிரதமருக்கும், அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் இருக்கிறது.
எதிர் கட்சித் தலைவராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அரசியல் அமைப்புச் சட்டங்கள் பற்றியும், அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சட்டங்கள் குறித்தும் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் , ஒவ்வொரு துறையிலும், என்ன என்ன பிரச்சனைகள் வருகின்றன? அவற்றுக்கு என்ன வகையான தீர்வுகள் இருக்கின்றன ? ஒவ்வொரு துறையிலும் என்ன என்ன முன்னேற்றங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவதும் எதிர்கட்சித் தலைவரின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.
பொதுவாக, நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை, நிதிநிலை அறிக்கை போன்ற முக்கிய விவாதங்களில் பங்கேற்கும் முதல் நபராகவும் மக்களவையின் எதிர்கட்சி தலைவர் பணியாற்றுவார்.
எந்த ஒரு முடிவையும் எதிர்கட்சித் தலைவரின் ஆதரவு இல்லாமல், எடுப்பதில் ஆளும் கட்சிக்கு பல சிரமங்கள் இருக்கத் தான் செய்யும். இத்தகைய பொறுப்புமிக்க பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இதில் ராகுல்காந்தியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போக போக தான் தெரியவரும்.