பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளரும், விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றமும், அவரை விடுதலை செய்தது. இதனை அடுத்து, தாய்நாடான ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, 2010ம் ஆண்டு ஜூலை தொடங்கி, தனது விக்கிலீக்ஸ் என்ற இணையத் தளத்தில், அமெரிக்க ராணுவ ஆவணங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடந்த போர்கள் பற்றி சுமார் 10,000 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் மூலமாக, அமெரிக்காவின் போர்க்கால மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்ட மீறல்கள் என நிறைய அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிச்சத்துக்கு வந்தன.
அதே ஆண்டில், அமெரிக்க இராஜதந்திர இரகசியங்களை வெளியிட்டு, அடுத்த அதிர்ச்சியை ஜூலியன் அசாஞ்சே ஏற்படுத்தினார்.
ஐக்கிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா எப்படி உளவு பார்த்தது என்றும், ஈரானைத் தாக்குமாறு அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா அழுத்தம் கொடுத்தது என்றும் பல அதிர்ச்சி தகவல்கள், ஜூலியன் அசாஞ்சே வெளியிட்ட ரகசியங்கள் இருந்தன.
அதே ஆண்டு நவம்பரில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக, லண்டனில் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் ஜூலியன் அசாஞ்சே.
இந்த நிலையில், 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஜூலியன் அசாஞ்சை ஸ்வீடனுக்கு நாடு கடத்துவதற்குத் தீர்ப்பளித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு அஞ்சி, 2012 ஜூன் மாதம், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஜூலியன் அசாஞ்சேவிற்கான அடைக்கலத்தை 2019ம் ஆண்டு ஈக்வடார் அரசு விலக்கிக் கொண்டது. இதையடுத்து, பிரிட்டன் காவல்துறை அசாஞ்சை கைது செய்தது.
2010ம் ஆண்டு வழங்கப் பட்ட, ஜாமீனை மீறிய குற்றத்துக்காக, ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதே அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
2019ம் ஆண்டு மே மாதம், ராணுவ மற்றும் ராஜதந்திர கோப்புகளை வெளியிட்டதன் மூலம் அமெரிக்க உளவு சட்டத்தை மீறியதாக அசாஞ்சே மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது.
2016 அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஹிலாரி கிளிண்டனின் பெயரைச் சேதப்படுத்தும் மின்னஞ்சல்களை ரஷ்யா கசியவிட்டது. இதை மறுத்தால், மன்னிப்பு அளிப்பதாக அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்திருந்தார் என்று நீதிமன்றத்தில் அசாஞ்சேயின் வழக்கறிஞர்கள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சே வழக்கில் அவருக்குப் பின்னடைவுகள் ஏற்பட்டன. அமெரிக்காவிற்கு நாடு கடத்தினால், அவர் தற்கொலைக்கு ஆளாக நேரிடும் என்ற அடிப்படையில் ஜனவரி 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், லண்டன் நீதிமன்றம் அவரை நாடு கடத்த கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் இந்த தீர்ப்பு , பிரிட்டன் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டது.
இதனையடுத்து, 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி , பிரிட்டன் அரசு, ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், தன்னை விடுதலை செய்வதாக உறுதியளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொள்வதாக தெரிவித்ததை ஏற்பட்ட ஒப்பந்தத்தால் பெல்மார்ஷ் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் மெரினா தீவில் உள்ள அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் அசாஞ்சே ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், ஜூலியன் அசாஞ்சேவுக்கு 5 ஆண்டுகள் 2 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கெனவே பிரிட்டன் சிறையில் தண்டனை காலங்களை அனுபவித்துவிட்ட காரணத்தால், ஜூலியன் அசாஞ்சேவை விடுதலை செய்வதாக அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்சே, தனி விமானம் மூலம் அவர் தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றார்.
ஒருவழியாக 23 ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்து சுதந்திரப் பறவையாகி இருக்கிறார் ஜூலியன் அசாஞ்சே.