கென்யாவில் அரசு விதித்த புதிய வரிகளுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்ததால் பல நகரங்கள் பற்றி எரிகின்றன. இதற்கு காரணம் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
இந்தியாவில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டம் நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. அதே போல கென்யாவில் ஜூலை முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டம் நிதியாண்டாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பாக வரிகளை உயர்த்தும் வகையிலான நிதி மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் கென்ய அரசு தாக்கல் செய்தது. அத்தியவாசியப் பொருட்களான BREAD, சமையல் எண்ணெய் போன்றவற்றுக்கான வரியை உயர்த்தும் சரத்துகள் அந்த மசோதாவில் இருந்ததாக தெரிகிறது. அதற்கு எதிராக மக்கள் தொடங்கிய போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் மக்கள் தெருவில் இறங்கி போராட காரணம் டிக்டாக் வீடியோக்கள் என்பதே. சீனாவைச் சேர்ந்த டிக்டாக் நிறுவனத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம்.
2020-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை பெரும்பாலான இந்தியர்கள் டிக்டாக்கில் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏராளமானோர் விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் டிக்டாக்கை பயன்படுத்தினார்கள். சில நொடிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய பலருக்கு வெள்ளித்திரையில்கூட வாய்ப்பு கிடைத்தது.
மேலும் சிலர் நல்ல தகவல்களை பரப்ப டிக்டாக்கை பயன்படுத்திக் கொண்டனர். எப்போதுமே நல்லது இருக்கும் இடத்தில் கெட்டதும் இருக்குமல்லவா… அதற்கு டிக்டாக் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆபாசமான வீடியோக்களும், வதந்திகளும் டிக்டாக்கில் வலம்வந்ததை நாம் அறிவோம்.
குறிப்பாக கொரோனா காலத்தில் பல்வேறு தவறான தகவல்கள் டிக்டாக்கில் பரப்பப்பட்டன. அதற்கெல்லாம் மொத்தமாக ஒரு முடிவு கட்டவே டிக்டாக்குக்கு தடை விதித்தது மத்திய அரசு.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் டிக்டாக்கை அனுமதிக்கவில்லை என்றாலும் கென்யாவில் அது பயன்பாட்டில்தான் இருந்தது. அந்நாட்டு இளைஞர்கள் பலர் டிக்டாக்கை அதிகளவில் பயன்படுத்திவந்தனர்.
அவர்களில் ஒருவர் நிதி மசோதாவை விமர்சித்து பதிவிட்ட வீடியோ வைரலானதால் அதே CONCEPT-ஐ பிறரும் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். ‘OCCUPY PARLIAMENT’, ‘REJECT FINANCE BILL 2024’ போன்ற HASHTAG-களில் பதிவுகள் அதிகரித்தன. அவற்றில் டிக்டாக் பிரபலங்களின் பதிவுகளும் அடக்கம்.
எல்லாம் சேர்ந்து கென்ய அரசுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் பரவச்செய்தது. பெரும் போராட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டங்கள் டிக்டாக்கிலும் எக்ஸ் தளத்திலும் நடைபெற்றன.
ஏராளமானோர் கருப்பு உடை அணிந்து கென்ய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். நிதி மசோதாவுக்கு எம்.பி.-கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பலர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். அவர்களை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்கு தீ வைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாகவும், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்கள் மூலம் நாட்டில் எத்தகைய தாக்கத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.