கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து நாளை மனு அளிக்கவுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் என தெரிவித்தார்.