கொல்கத்தாவில் உள்ள ‘பிரிட்டானியா’ நிறுவனம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேற்கு வங்க அரசின் தவறான தொழில் கொள்கை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பின்னணி காரணம் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
GOOD DAY, BOUR BON, FIFTY FIFTY என இந்தியர்களின் பிடித்தமான பிஸ்கட் வகைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனமான ‘பிரிட்டானியா’ தான், உலகின் மிக பழமையான பிஸ்கட் உற்பத்தி நிறுவனமாகும்.
1892ம் ஆண்டு C.H.HOLMES தொடங்கிய இந்நிறுவனம், இன்று கிட்டத்தட்ட 80 நாடுகளில் 130க்கும் மேலான விற்பனை மையங்களுடன் பரந்து விரிந்து இருக்கிறது.
ஒவ்வொரு இந்தியர்களின் வாழ்வியலோடு ஒன்று கலந்து இருக்கும் ‘பிஸ்கட் பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் சிற்றுண்டி வகைகளை உற்பத்தி செய்து பிரிட்டானியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
கொல்கத்தா துறைமுகத்திற்குச் சொந்தமான 11 ஏக்கரில் அமைந்துள்ள தாரதாலா பிரிட்டானியா உற்பத்தி ஆலை 1947ம் ஆண்டு நிறுவப் பட்டது. மிக அதிக அளவில் உற்பத்தித் திறன் கொண்ட இந்த ஆலையைத் தான் இப்போது இழுத்து மூட முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை மற்றும் சென்னையில் உள்ள பிரிட்டானியாவின் தொழிற்சாலைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
2018ம் ஆண்டில், கொல்கத்தாவில் நடந்த நிறுவனத்தின் AGM கூட்டத்தில் தாரதாலா ஆலை முக்கியமானது என்று பேசிய பிரிட்டானியா தலைவர் நுஸ்லி வாடியா, மேற்கு வங்கத்தில் புதிதாக 350 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த மே மாதம், இந்த ஆலையில் உற்பத்தியை நிறுத்திய கையோடு, கடந்த ஜூன் 20 ஆம் தேதி பங்கு சந்தைக்கு, தாரதாலா ஆலையின் பணியில் இருந்த நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப் பூர்வமாக தெரிவித்திருந்தது.
அதன்படி, இழப்பீட்டுத் தொகையாக, 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு 22 லட்சம் ரூபாயும், 7 ஆண்டுகள் பணி புரியும் ஊழியர்களுக்கு 18 லட்சமும் வழங்கபட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரிட்டானியா ஆலை மூடப்படுகிறது என்ற செய்தி வந்ததிலிருந்தே, மேற்கு வங்க அரசியலில் பூகம்பம் வெடிக்க தொடங்கியுள்ளது. மும்பை மற்றும் சென்னையில் உள்ள பிரிட்டானியாவின் தொழிற்சாலைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
மேற்கு வங்காளத்தின் இணைப் பொறுப்பாளரும், பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைவருமான அமித் மால்வியா, பிரிட்டானியா ஆலை மூடப்படுவது வங்காளத்தின் சரிவைப் பிரதிபலிக்கிறது என்று தனது எக்ஸ் பதிவில், தெரிவித்திருக்கிறார்..
மேலும் , யூனியன் மிரட்டல்கள்,மாமூல் மிரட்டல்கள் ஆகிய சாபங்களில் இருந்து மேற்கு வங்கம் எப்போது மீளப் போகிறதோ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கமாநில அரசின் சார்பில், முதல்வர் மம்தா பானர்ஜியின் முதன்மை தலைமை ஆலோசகர் டாக்டர் அமித் மித்ரா, பிரிட்டானியா முழுமையாக மாநிலத்தை விட்டு வெளியேற எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்று கூறியிருந்தார்.
தாரதாலா ஆலையின் குத்தகை ஒப்பந்தம் 2018ம் ஆண்டு மேலும் 30 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்டு 2048ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உற்பத்தி இனி பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இல்லை என்பதால், தாரதாலா ஆலை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் ,மேற்கு வங்கத்தில் நானோ கார் உற்பத்தி தொழிற்சாலை உருவாக்க, டாடா நிறுவனம் முதலீடு செய்த நிலையில் , மம்தா தலைமையிலான அரசு அதற்கு அனுமதி மறுத்தால், அந்த தொழிற்சாலை குஜராத்தில் தொடங்கப் பட்டது.
அந்த வகையில், இப்போது பிரிட்டானியா நிறுவனம் தனது முக்கியமான உற்பத்தி ஆலையை மூடியிருக்கிறது. இது தொடர்ந்தால் மேற்கு வங்கத்தில் தொழில் முதலீடு செய்வதற்கு பெரும் முதலாளிகள் தயங்குவார்கள் என்று வணிக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.