டெல்லியில் தேர்வு ஒன்றில் இதயம் தொடர்பான கேள்விக்கு மாணவர் எழுதியுள்ள பதில் நெட்டிசன்கள் இடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் உயிரியல் பாடத்தேர்வின்போது இதயம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டிருந்தது. தேர்வில் இதயம் பற்றிய வரைபடம் வரைந்து, அதன் பாகங்களை குறிக்கும்படி கேட்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த கேள்விக்கு, ஈர்ப்பின் வெளிப்பாடாக மாணவர் ஒருவர் பதிலளித்துள்ள விதம் சிரிப்பை வரவழைத்துள்ளது. இதயத்தின் உள்பாகங்களான ஏட்ரியம் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் ஆகியவற்றை பற்றி குறிப்பிடுவதற்கு பதிலாக, பிரியா, ரூபா, பூஜா, நமீதா மற்றும் ஹரிதா என மாணவரின் வாழ்வில் முக்கிய இடம் பிடித்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். அந்த ஒவ்வொரு பெயருக்கும் அதன் செயல்பாடுகள் என்ற பெயரில் மாணவர் விளக்கமும் அளித்துள்ளார்.
இதில், பிரியா என்ற பெயருக்கு, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து சாட்டிங் செய்யும் தோழி என்றும், ரூபா ஸ்நாப்சாட்டில் உரையாடும் அழகான பெண் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, இடமே இல்லாத சிறிய இடத்தில் நமீதா என குறிப்பிட்டு, நீண்ட தலைமுடி மற்றும் பெரிய கண்களை உடையவர் என்றும் குறிப்பிட்டு அதற்கான படமும் வரைந்துள்ளார்.
பூஜாவை முன்னாள் காதலி என குறிப்பிட்டுள்ள மாணவர், ஹரிதா தன்னுடைய வகுப்பு தோழி என நிறைவு செய்துள்ளார்.
மாணவரின் கேள்விக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்கிய ஆசிரியை பெற்றோரை அழைத்து வருமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் வைரலான மாணவர் எழுதிய விடைத்தாள் 6 கோடியே 43 லட்சம் பேர் பார்வையிட்டுள்ள நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.