நடைமுறைக்கு சாத்தியமற்ற அறிவிப்புகளை வெளியிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை திசைதிருப்ப தமிழக அரசு முயற்சிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை மேற்கோள்காட்டி, வெற்று விளம்பரத்துக்காக இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
இதற்கு திமுக எம்.பி. வில்சன் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் திருச்சி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் பணிக்காக 1,112 கோடி ரூபாயும், சென்னை விமான நிலையத்தில் புதிய டெர்மினல் பணிக்காக 1,260 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையிலான திறமைவாய்ந்த மத்திய அரசின்கீழ், ‘உதான்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் சேலம், நெய்வேலி, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் வேலூரில் விமான நிலைய கட்டுமானப் பணிக்காக 195 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில ரியல் எஸ்டேட் அதிபர்கள், குறிப்பிட்ட பகுதி வளர்ச்சியடைய போவதாக தங்களுக்கு தகவல் வந்தால், அங்கு அடிமாட்டுவிலைக்கு நிலத்தை வாங்குவதாக குற்றம்சாட்டியுள்ள அண்ணாமலை, பாஜகவினர் எப்போதுமே மக்களின் நலனுக்காக பாடுபடுவதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள விமான நிலையத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதியதாக பசுமை விமான நிலையம் அமைக்கப்படக் கூடாது என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெளிவாக வழிகாட்டுதலை பிறப்பித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி பிரச்சினையை திசைதிருப்பும் வகையில், தமிழக அரசு செயல்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.