முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
285 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவு கொண்ட கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
முந்தைய காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்றாகும்.
கடந்த 1885-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி சேதுபதி மன்னரின் எஸ்டேட் மேலாளர் டி. ராஜாராம ராயரிடமிருந்து முத்துசாமிப் பிள்ளை என்பவர் சாயவேர் சேகரிக்கக் கச்சத்தீவை ஆண்டுக்குப் பதினைந்து ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்துள்ளார்.
1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-இல் கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்து, அந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் மற்றும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகேவும் கையெழுத்திட்டனர்.
ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளவும், மீன்வலைகளை உலர வைக்கவும், அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளவும் உரிமையளித்து கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. ஆனால், அந்த உரிமை எதுவும் தமிழக மீனவர்களுக்கு முழுவதுமாக அளிக்கப்படவில்லை.
இன்றுவரை கச்சத்தீவை சுற்றி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு ஆளாகி வருகின்றனர்.