தனியார் பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுகிறார்களா என்று, இந்த அரசு கண்காணிப்பதாகத் தெரியவில்லை என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பங்குவார்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
இன்னும் எத்தனை காலங்களுக்கு மீண்டும் மீண்டும் இதே போன்ற செய்தியை கேட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்? தனியார் பட்டாசு ஆலைகள், அவர்களுக்கு உண்டான விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுகிறார்களா என்று, இந்த அரசு கண்காணிப்பதாகத் தெரியவில்லை.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து முறையான ஆய்வு செய்கிறார்களா என்கிற பலத்த சந்தேகத்தையும் நம்மிடத்தில் ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக இந்த ஆண்டில் மட்டும் நான்கிற்கும் மேற்பட்ட விபத்துகள், விருதுநகர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்பட்டுள்ளது.
பறிபோவதெல்லாம் சாமானிய அப்பாவி மக்களின் உயிர் என்பதையும், அவர்களது குடும்பத்தாரின் நிலையையும் இந்த அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் விபத்துகள் ஏற்படாத வண்ணம், மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்திற்கு தேவையான நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டுமென்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன். ஓம் சாந்தி..! எனத் தெரிவித்துள்ளார்.