டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்திய இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தது, இந்தியாவின் வெற்றி ரோகித் சர்மாவின் மிகச்சிறந்த தலைமைக்கு ஒரு சான்று எனவும் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுருந்தார்.
டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆச்சரியமூட்டும் வெற்றியை பெற்றதற்கு வாழ்த்துகள் என்றும், தொடர்ந்து போராடி விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்து, அற்புதமான கேட்ச்களால் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த தொடர் முழுவதுமே சாம்பியன்களை போல நம்முடைய வீரர்கள் ஆடியதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்திய அணியின் வெற்றி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தது, இந்த டி20 உலகக்கோப்பையின் வெற்றி எதிர்கால தலைமுறைக்கு உந்துதல் அளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாழ்த்து தெரிவிக்கும் பொழுது “உலகக்கோப்பை சாம்பியன்கள் 2024 தமது இதயத்துடிப்பை அதிகரித்ததாகவும், அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் ஆடியது சிறப்பு வாய்ந்தது என தெரிவித்தார்.