17 வருடங்களுக்குப் பிறகு ஐசிசி டி20 உலக கோப்பை வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி, பத்து வருடங்கள் காத்திருப்புக்கு பிறகு, இந்திய அணி ஐசிசி கோப்பையை சொந்தமாக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…!
உலக கிரிக்கெட் அரங்கில் மகிழ்ச்சியான தருணம், கண்ணீரும் கட்டியணைப்புமாக இந்தியாவின் 140 கோடி இதயங்களும் நிறைவான தருணம்… நிழலாய் தொடர்ந்த கனவு, நிஜமாய் மாற… நீல நெருப்புகளின் கதகதப்பில் ஒட்டுமொத்த இந்தியாவும் குளிர் காய்ந்தது…. நேற்றைய இரவில்….
ஐசிசி உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஒரு அற்புதமான இறுதிப் போட்டியை, வரலாற்றில் இனி அழிக்க முடியாத ஒரு இறுதிப் போட்டியை ரசிகர்களுக்கு பரிசளித்து இருக்கிறது இந்தியா…
தென்னாப்பிரிக்கா அணியுடனான இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2 வது முறையாக டி20 உலகக் கோப்பை வென்றது இந்திய அணி. 2013 இல் சாம்பியன்ஸ் கோப்பை வென்றதன் பிறகு, 10 வருடங்கள் காத்திருப்பின் பலனாக இறுதியாக ஐசிசி கோப்பையை சொந்தமாக்கிக் கொண்டது இந்திய கிரிக்கெட் அணி…
தொடர் முழுவதுமாக ஒரே ஒரு கேள்வி தான்… விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இந்த இளம் படை ஒரே ஒரு கோப்பையை வென்று கொடுத்துவிடக்கூடாதா என்ற ஒரே கேள்வி தான்… ஒட்டுமொத்த கனவும் நினைவாக, நிறைவான ஒரு போட்டியை பரிசளித்தது இந்திய அணி…
177 ரன்கள் இலக்கு என்ற போது இலக்கு கடினமான ஒன்றாக பார்க்கபட்டாலும், அதிரடி பேட்டர்களுக்கு பேர் போன தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்கு நெற்றி அடி கொடுத்தது உண்மைதான். 23 பந்துகளில் 26 ரன்கள் இருந்த போதே, அப்செட்டை பார்த்து விடுவோமோ என்ற எண்ணம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஓடிக்கொண்டு இருந்தாலும், ஜாஸ்பிரித் பும்ரா, ஹர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா எனும் நம்பிக்கைகளை நம் கண் முன் நிறுத்தியது இந்தியா….
அங்கேயே முடிந்துவிடும் என்று எண்ணிய போட்டி, இனிமேல் தான் ஆரம்பம் என்ற பாணியில் பரபரப்பை கூட்ட, 6 பந்துகளில் 16 ரன்களை எதிர்பார்த்து காத்திருந்தது தென்னாப்பிரிக்கா… ஆனால் அங்கே பந்துவீச வந்ததோ, கடந்த சில மாதங்களாக மனமுடைந்த நிலையில் தன்னை மெருகேற்றி கொண்ட ஹர்திக் பாண்டியா… வீசிய ஒவ்வொரு பந்திலும் தன் மீது சமீப காலமாக வைக்கப்பட்ட விமர்சனங்களை மறக்கடிக்கச் செய்தார்…
சூர்யா குமார் யாதவின் பவுண்டரி லைன் கேட்ச், தென்னாப்பிரிக்கா ரசிகர்களின் இதயங்களை நொறுக்க, தலை குனிந்த நடையுடன் பெவிலியன் திரும்பினார் டேவிட் மில்லர்… கடைசி 5 பந்துகளையும் பக்குவமாய் எறிந்த பாண்டியா, இந்தியாவின் கனவை நினைவாக்கினார்…. 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கண்ட இந்திய அணி வீரர்கள், மண்டியிட்டு மனம் விட்டு அழுத காட்சிகள், 2023 ஒருநாள் உலகக் கோப்பையை பறிகொடுத்த தருணத்தை நினைவூட்டியது.
கோலி, ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் கண்களில் ஆனந்த கண்ணீர் சூழ மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடிய தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது… சமீப காலமாக ஒவ்வொரு தொடரிலும் இறுதி வரை போராடி தோல்வியை சந்தித்து வந்த இந்தியா, இந்த முறை நினைத்ததை சாதித்தது… கொண்டாட்டத்தில் ஒருபுறம் கோப்பையை கைகளில் ஏந்தினாலும், மறுபுறம் விராட் கோலியின் ஓய்வு ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கத் தான் செய்யும்.
ஆனால் அதே சமயம் நிச்சயம் தென்னாப்பிரிக்கா அணியின் இறுதி வரையிலான பயணத்தை பாராட்டி ஆக வேண்டும். லக் இல்லாத அணியாக உலக கிரிக்கெட்டில் தொடர்ந்து வரும் தென்னாப்பிரிக்கா, இங்கேயும் அதே நிலையில் தான் தங்கள் பயணத்தை நிறைவு செய்திருக்கிறது.
எது எப்படியாயினும்… இந்திய ரசிகர்களின் கோப்பை கனவு நிறைவேறியது… இது இந்தியாவின் நாளாக மாறியது… நிறைவான தூக்கத்தை உணரச் செய்தது….
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களுக்கு தமிழ் ஜனம் செய்திகள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.