தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எம்.பி.யுமான இரா. சம்பந்தன் மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தனை நேரில் சந்தித்தது குறித்த நினைவுகளைப் போற்றுவதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ அவர் அயராது உழைத்ததாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
இலங்கையில், தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவரான இரா.சம்பந்தன் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார். இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும், ஈழத்தமிழ் சொந்தங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.