அமெரிக்காவில் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண் தன் மன வலிமையால் இசை உலகின் ராணியாக மாறினார். பாலியல் சீண்டல்கள், வன்முறைகளைத் தாண்டி சாதனை படைத்த அந்த பெண்தான் ‘QUEEN OF POP’ என்றழைக்கப்படும் மடோனா.
விற்பனையில் சாதனை படைத்த ஆல்பங்கள்… GOLDEN GLOBE உள்ளிட்ட பல்வேறு விருதுகள்… குரலைக் கேட்டு உருகும் கோடிக்கணக்கான ரசிகர்கள்… 40 ஆண்டுகளுக்கும் மேலாக POP இசை உலகில் தனி ஆவர்த்தனம்…
இப்படி பல உயரங்களை அடைந்திருந்தாலும் பாடகி மடோனாவின் வாழ்க்கை பூப்பாதைகளால் நிறைந்தது அல்ல. 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள BAY CITY-ல் பிறந்த மடோனாவின் முழுப்பெயர் MADONNA LOUISE CICCONE. நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகளோடு பிறந்தவர்.
இவ்வளவு பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவரது தந்தைக்கு வருமானம் இல்லை. போதாக்குறைக்கு மடோனாவுக்கு 5 வயது இருக்கும்போதே மார்பக புற்றுநோயால் அவரது தாய் இறந்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் மடோனாவின் தந்தை மறுமணம் செய்து கொண்டார்.
“அம்மாதான் சில பழக்கங்களை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார். அப்படி எதையும் நான் கற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் சொல்லிக்கொடுக்கவும் அன்பு செலுத்தவும் அம்மா இல்லை. அதனால் இந்த உலகமே என் மீது அன்பு செலுத்த வேண்டும்”
சிறுவயதில் தாயின் அன்புக்கு ஏங்கிய மடோனா பிற்காலத்தில் அதை இவ்வாறு வெளிப்படுத்தினார்.
பள்ளியில் படிக்கும்போதே எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் மடோனாவை துரத்திக் கொண்டிருந்தது. அப்பா சொன்னபடி பியானோ கற்கச் சென்றார். பின்னர் அது பிடிக்கவில்லை என்று நடனம் கற்றுக்கொண்டார். கல்லூரி படிப்பு நின்று போக இனி மிச்சிகனை விட்டு வெளியேறுவதே நல்லது என்ற முடிவுக்கு வந்த மடோனா, கையில் வெறும் 35 டாலருடன் விமானத்தில் நியூயார்க் சென்று சேர்ந்தார்.
அங்கு ALVIN AILEY என்பவரது குழுவில் நடனமாடிக் கொண்டே பல்வேறு வேலைகளையும் செய்தார். DONUTS-ல் விற்பனைப் பெண், ஓவியர்களுக்கு மாடல் என சாப்பாட்டுக்கும் வாடகை கொடுக்கவும் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி பணம் ஈட்டினார்.
அந்த நேரத்தில் மடோனாவின் நண்பர்கள் சொன்ன ஒரு யோசனை அவரது வாழ்வையே திருப்பிப்போட்டது. “உனக்கு DANCE SET ஆகல, ஆனா VOICE நல்லாருக்கு, அதனால பாட்டு கத்துக்கோ”… நண்பர்கள் இப்படிச் சொன்னதைக் கேட்டு சிரித்தார் மடோனா.
ஒரு நாள் நடன ஒத்திகைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது கத்தி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதை நினைத்து ஆண்டுக்கணக்கில் வருந்தினாலும் அவர் முடங்கிப்போகவில்லை. DAN GILROY என்ற பாடகருடன் சேர்ந்து மேடைகளில் பாடத் தொடங்கினார். PATRICK HERNANDEZ என்ற பிரபல FRENCH பாடகருடன் பாட வாய்ப்புக் கிடைத்தது.
சென்ற இடங்களில் எல்லாம் தமது குரலுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்ட மடோனா இதுவே தமது வாழ்க்கைப்பாதை என முடிவு செய்தார். மடோனாவின் முதல் இசை ஆல்பமான EVERYBODY, 1982-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து வந்த ஆல்பங்களும் ஹிட் அடிக்க ‘QUEEN OF POP’-ஆக மாறினார் மடோனா.
பாடகி, பாடலாசிரியர், தொழிலதிபர் என பல உச்சங்களை தொட்ட மடோனாவின் வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. INSTAGRAM-ல் ஆடைகளற்ற புகைப்படத்தை வெளியிட்டது முதல் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள்… அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதே இல்லை. மடோனா கேட்டுக்கொண்டதைப் போல ஏராளமானோர் அவர் மீது அன்பு செலுத்தும் போது இந்த சர்ச்சைகளாலும் விமர்சனங்களாலும் என்ன செய்துவிட முடியும்?